பற்றி எரியும் அமேசான் காடு: காட்டுத்தீயை அணைக்க களத்தில் இறங்கிய அதிபர்
அமேசான் மழைக்காடுகளின் பெரும்பாலான பகுதி, பிரேசிலில் இருந்தாலும் அண்டை நாடுகளான பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட 8 நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்த நிலையில், அமேசானில் பற்றி எரியும் காட்டுத் தீயானது பொலிவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிகுய்தானியா பிராந்தியத்திலும் எரிந்து வருகிறது. பொலிவியா எல்லைக்குட்பட்ட அமேசான் காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துவிட்டன.
இந்த காட்டுத்தீயை அணைக்க, பொலிவியா அரசு அமெரிக்காவிடம் இருந்து சூப்பர் டேங்கர் என்று அழைக்கப்படும் ‘போயிங் 747’ விமானத்தை குத்தகைக்கு வாங்கி இருக்கிறது. மேலும் 2 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பொலிவியா அதிபர் ஈவோ மெரேலஸ் சிகுய்தானியா பிராந்தியத்துக்கு நேரில் சென்று, தீயணைக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது, கவச ஆடைகளை அணிந்து கொண்டு அவரும் தீயணைக்கும் பணியில் களம் இறங்கினார்.
அதனை தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஈவோ மெரேலஸ், தீயணைப்பு பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையில் சிகுய்தானியா பிராந்திய காட்டுத்தீயில் 90 சதவீதம் அதிகமானவை அணைக்கப்பட்டு விட்டதாக ஈவோ மெரேலஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.