முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி
இந்தியா ‘ஏ’ – தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 79 ரன்களும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), அக்ஷர் பட்டேல் 60 ரன்களும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), சுப்மான் கில் 46 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 45 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரீஜா ஹென்ரிக்ஸ் (110 ரன்) சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய ‘ஏ’ அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.