வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி போன்றே இந்த டெஸ்டிலும் இந்திய அணியினர் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் உள்ளனர். தொடக்க டெஸ்டில் ரஹானேவின் சதமும், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோரின் அரைசதமும் அணிக்கு வலுசேர்த்தன. பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மாவும், ஜஸ்பிரித் பும்ராவும் மிரட்டினர். குறிப்பாக 2-வது இன்னிங்சில் இன்ஸ்விங், அவுட்ஸ்விங்கில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை கதறடித்த பும்ரா 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து பிரமாதப்படுத்தினார்.
இந்திய அணியை பொறுத்தவரை இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுவின் பேட்டிங் சமீபகாலமாக பெரிய அளவில் இல்லை. இதனால் அவருக்கு பதிலாக விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தாலும், வெற்றிக்கூட்டணியை உடைக்க கேப்டன் கோலி விரும்பமாட்டார் என்றே தெரிகிறது. அதனால் ரிஷாப் பண்டுவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கலாம்.இந்த டெஸ்ட் தொடர் உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் உள்ளடக்கியதாகும். முதலாவது டெஸ்ட் வெற்றியால் 60 புள்ளிகளை குவித்த இந்திய அணி, இந்த டெஸ்டிலும் அதே 60 புள்ளிகளை சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
தொடர்ந்து தடுமாறி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம். முதலாவது டெஸ்டில் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதத்தை எடுக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஷனோன் கேப்ரியல், கெமார் ரோச் ஆகியோரின் பந்து வீச்சு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்தாலும் அவர்களுக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே அந்த அணியால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இல்லாவிட்டால் பலவீனமே வெளிப்படும். வெஸ்ட் இண்டீஸ் அணி 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷமாரா புரூக்ஸ், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கெமார் ரோச், கீமோ பால், கேப்ரியல்.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகலுக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.