எந்தெந்த நாடுகள் ஆதரவு பட்டியலிட முடியுமா? நிருபரின் கேள்வியால் கோபமடைந்த பாகிஸ்தான் மந்திரி
பாகிஸ்தானுக்கு எந்தெந்த நாடுகள் ஆதரவு என பட்டியலிட முடியுமா என நிருபரின் கேள்வியால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பாகிஸ்தான் மந்திரி.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பான நிருபரின் கேள்வியால் பொறுமையிழந்து கோபமடைந்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த எக்ஸ்பிரஸ் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ஷா மெஹ்மூத் குரேஷி கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் 58 நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி வரும் தாங்கள், அவை எந்தெந்த நாடுகள் என பட்டியலிட முடியுமா என நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் பொறுமையிழந்த குரேஷி யாருடைய தூண்டுதலின் பேரில் இவ்விதமான கேள்விகளை கேட்கிறீர்கள் என கோபமாக பதில் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து டுவிட்டரிலும் இவ்விதமான கருத்துகளை பதிவிட்டதாக செய்தியாளர் கூறவே கோபத்தின் உச்சிக்கே சென்ற குரேஷி, தான் அவ்வாறு பதிவிடவில்லை எனவும், எங்கே தனது பதிவை காட்டுங்கள் எனவும் நிருபரின் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து நிருபர் அவர் கேட்ட டுவிட்டர் பதிவையும் காண்பிக்கவே, தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக குரேஷி பதிலளித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் உரையாற்றிய இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் தொடர்பான பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு 58 நாடுகள் ஆதரவளித்ததாக தெரிவித்திருந்தார்.
அவரது கருத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியாக ஷா முகமது குரேஷி பேசி வந்ததாலேயே செய்தியாளர் அது தொடர்பாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டு இருந்த் டுவிட்டர் பதிவுகளில், “ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை இந்தியா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், அங்குள்ள இந்தியாவின் முற்றுகை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த அறிக்கையில் 57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
2019-2021 ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவை பின்வரும் 47 நாடுகள் ஆகும்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள நாடுகள் விவரம் வருமாறு:-
ஆப்பிரிக்க நாடுகள்: 13
ஆசியா-பசிபிக் நாடுகள்: 13
லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள்: 8
மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள்: 7
கிழக்கு ஐரோப்பிய நாடுகள்: 6
மொத்தம் – 47