மாநிலங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி : “குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்”
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்துள்ளது.
இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளுகிற மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநில முதல் மந்திரிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இதை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற ரீதியில் மாநிலங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியுரிமை உள்ளிட்ட மத்திய பட்டியலில் உள்ள பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட நாடாளுமன்றம் இயற்றுகிற சட்டங்களை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்பது அரசியல் சாசன கடமை ஆகும்.
நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டமும், பிராந்தியத்துக்கு புறம்பான செயல்பாட்டை கொண்டிருக்கும் என்ற அடிப்படையில் செல்லுபடியாகாது என்று கூறக்கூடாது. இதை அரசியல் சாசன சட்டம் பிரிவு 245 உட்பிரிவு 2 சொல்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சூளுரைப்பவர்கள் தகுந்த சட்ட கருத்தைப் பெற வேண்டும்.
அரசியல் சாசனத்தின்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டு அதிகாரத்துக்கு வருகிறவர்கள், அரசியல் சாசனத்துக்கு விரோதமான கருத்துகளை கூறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.