தெற்காசிய பொருளாதாரத்தில் திணறும் இந்தியா
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தை ஜெர்மனியிடம் இருந்து தட்டிப்பறிக்கும் நிலையை இந்தியா எட்டியுள்ள வேளையில், அதன் அண்டை நாடான சீனாவை ஒப்பிடும் போது, இந்தியாவின் பொருளாதார பலம் மிகவும் குறைவாக உள்ளது.
உண்மையான ஜி.டி.பி. அளவுகோல்படி. சீனா, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. வாங்கும் சக்தி சமநிலையின் (பி.பி.பி) அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளது.
1970-களில் இந்தியாவும், சீனாவும் பொருளாதார ரீதியாக ஒப்பிடத்தக்க அளவில் இருந்தன. ஆனால் சீனாவின் பொருளாதார மற்றும் ராஜதந்திர கொள்கைகளின் விளைவாக அசுர வளர்ச்சியை அடைந்து, ஒரு விவசாயம் சார்ந்த பொருளாதாரமாக இருந்து மிக வலிமை வாய்ந்த நவீன பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்தியா இந்த வளர்ச்சியை தவற விட்டுவிட்டதாக தோன்றுகிறது.
இந்த இரண்டு ஆசிய நாடுகளின், வளர்ச்சி கதைகள் வெகுவாக வேறுபடுகின்றன. உலக விவகாரங்களில் சீனா முன்னணி பங்காற்றி, அனைத்து முனைகளிலும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவாலாக திகழ்கிறது. ஆனால் இந்தியா அந்த இடத்தை அடைய இன்றும் விரும்புகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 22 சதவீதத்தினர் வறுமையில் உள்ள நிலையில், சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும், சீனா ஒரு ‘பெரும் பாய்ச்சலை’ நிகழ்த்தியுள்ளது. 2019-ல் அதன் பொருளாதாரம் 14.14 லட்சம் கோடி டாலர் அளவை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 2.93 லட்சம் கோடி டாலராகத்தான் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை விட சீனாவின் பொருளாதாரம் சுமார் 5 மடங்கு பெரியது. நபர் ஒன்றுக்கான ஜிடிபி (பி.பி.பி அடிப்படையில்) அளவுகோலின்படி, அது 18,140 டாலர்களாக உள்ளது. இந்தியா 7,680 டாலர்களை கொண்டுள்ளது.
பெரிய அளவை கொண்ட ஜிடிபி தளத்தில், சீனா 6.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது. ஆனால் இந்தியா அதே அளவிலான வளர்ச்சி விகிதத்தை தக்க வைக்க, சீனாவை விட ஐந்து மடங்கு சிறிய ஜிடிபி தளத்தில் போராடுகிறது.
எளிமையாக சொல்ல வேண்டுமானால், உலக பொருளாதாரத்திற்கு இந்தியா வெறும் 3.39 சதவீத பங்களிப்பை தான் செய்கிறது. ஆனால் சீனா 16.3 சதவீத பங்களிப்பை செய்கிறது. உலக ஜிடிபி தரவரிசை பட்டியலில், 24.8 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து சீனா, ஜப்பான் (5.95 சதவீதம்), ஜெர்மனி (4.46 சதவீதம்) மற்றும் இந்தியா உள்ளன.
சீனாவில் வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் வேலை யின்மை விகிதம் 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவில் 8.5 சதவீதத்தை எட்டியுள்ளது.
சீனா, 2018-ல், 25.9 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக மக்கள் தினசரி என்ற சீன கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு கூறுகிறது. பாகிஸ்தான் (6 சதவீதம்) உள்ளிட்ட அனைத்து இதர அண்டை நாடுகளின் வேலையின்மை விகிதங்கள், இந்தியாவை விட குறைவாகவே உள்ளன.
இந்தியாவை போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரம், குறைவான வளர்ச்சி விகித்தை கொண்டிருக்க கூடாது என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர். “வறுமை மற்றும் வேலையின்மை போன்ற அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க, அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 8 சதவீத வளர்ச்சி விகிதம் தேவை’’ என்று பொருளியலாளர் பேராசிரியர் கே.என்.ஹரிலால் கூறுகிறார். வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்ய இந்தியாவில் பெரும் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முன்னெடுப்புகள் தேவைப்படுகின்றன.
வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், நேபாளம் மற்றும் பூடான் போன்ற இந்தியாவின் இதர அண்டை நாடுகள் மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பில் மிகச் சிறியதாக இருப்பதால், அவற்றின் பொருளாதார வளர்ச்சியை இந்தியாவுடன் நேரடியாக ஒப்பிட முடியாது. 1971 வரை பாகிஸ்தானின் அங்கமாக இருந்த பொருளாதார சீரழிவை எதிர்கொண்ட வங்கதேசம், பின்னர் இந்த பிராந்தியத்திலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக, 8 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைந்து பாகிஸ்தானை விஞ்சியது.
ஒரு துடிப்பு மிகுந்த உற்பத்தி துறையை வளர்த்தெடுத்துள்ள வங்கதேசம், அனைத்து வகையான வளர்ச்சி மற்றும் பொருளாதார குறியீடுகளில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சியின் வரலாறு சீனாவை போன்றது தான். சீனாவை விட பின்னாட்களில், 1991-ல் தனது பொருளா தாரத்தை திறந்து விட்டது. ஆனால் நடுவழியில் சுணங்கியது. நிலம், தொழிலாளர்கள் சட்டங்கள் மற்றும் நீதித் துறைகளில் சீர்திருத்தங்களை முன்னெடுக்காததால், அதன் பொருளாதார வளர்ச்சி வேகத்தை தக்க வைக்க முடியவில்லை.
இந்தியாவின் வளர்ச்சி பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் வழிநடத்திய, சேவைத்துறையின் மூலம் உருவானது. அதீத மக்கள் தொகை கொண்ட நாட்டில், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க இத்துறையினால் முடியவில்லை. தவறவிட்ட இந்த சந்தர்ப்பத்தை, நம் ஆட்சியாளர்களின் ‘பெரும் தவறு’ என்று வர்ணிக்கும் பொருளியலாளர்கள், இந்தியா ஒரு உற்பத்தி கேந்திரமாக உருமாற ஒரு பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக கூறுகின்றனர்.
சீனாவில் சேர்மன் மாவோசேதுங்கின் மறைவிற்கு பிறகு பதவியேற்ற டெங் ஜியோபிங், சீனாவை அதிக வேக வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றார். “பூனையின் நிறம் கருப்பா அல்லது வெள்ளையா என்பது முக்கியமல்ல. அது எலியை பிடித்தால் போதுமானது’’ என்ற புகழ்பெற்ற வாசகத்தை அவர் கூறினார். கம்யூனிஸ்டு சீனா, முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்றுக் கொண்டு, அதன் கதவுகளை அன்னிய முதலீடுகளுக்கு திறந்தது. சீனாவின் வளர்ச்சியை உற்பத்தி துறை வழிநடத்தியது. இன்று உலகின் உற்பத்தி கேந்திரமாக சீனா விளங்குகிறது.
2018-ல் இந்தியாவில் வேலை செய்யும் வயதுடையவர்களின் மக்கள் தொகை, சார்ந்திருப்பவர்களின் மக்கள் தொகையை விட அதிகரித்துள்ளது. குறைந்த வேகத்தில் வளரும், தேங்கி நிற்கும் பொருளாதாரத்தை கொண்டு, இந்த ‘மக்கள் தொகை ஈவுத் தொகை’ எனப்படும், மொத்த மக்கள் தொகையில், வேலை செய்பவர்களின் சதவீதம் அதிக அளவில் இருக்கும் நிலையை பயன்படுத்திக் கொள்ள முடியாது. பொருளாதார வளர்ச்சியை உந்தும் முக்கிய காரணி இது தான்.
சீனா உள்ளிட்ட வளர்ந்த பொருளாதாரங்களில், சார்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 கோடி இளைஞர்கள், மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் சேர உள்ளனர். தனது சக்திக்குரிய வளர்ச்சி வேகத்திற்கும், குறைவான வேகத்தில் வளரும் ஒரு பொருளாதாரத்தினால், இந்த மாபெரும் வேலை தேடும் இளைஞர் பட்டாளத்திற்கு, தேவையான வேலை வாய்ப்புகளை அளிக்க இயலாது. சமூக, பொருளியல் துறைகளில் ஒரு நாட்டின் மொத்த சாதனைகளை அளக்கப் பயன்படுத்தப்படும் புள்ளியல் கருவியான, சமீபத்தில் யு.என்.டி.பி. வெளியிட்டுள்ள மனித வள மேம்பாட்டு குறியீடு அட்டவணையில் (ஹெச்.டி.ஐ), இந்தியா மிக மோசமாக, 129-வது இடத்தில் வங்கதேசத்திற்கு (135) அருகே உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக, சீனா தனது ஹெச்.டி.ஐ. குறீயிடு அட்டவணை தரவரிசையை தொடர்ச்சியாக மேம்படுத்தி இன்று 85-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 152-வது இடத்திலும், அதை தொடர்ந்து நேபாளம் (147), மியான்மர் (145), பூடான் (134) மற்றும் இலங்கை (72) உள்ளன.