நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: தமிழகத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் நடந்த தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக தமிழகத்திலும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.6 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான காசோலைகள் முடங்கின.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்கங்கள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களுக்கு ஆதரவாக வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அனைத்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களும் பங்கு பெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும், வாராக்கடனை துரிதமாக வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். தமிழகத்திலும் வேலை நிறுத்தம் நடக்கிறது.
வங்கி, எல்.ஐ.சி., ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கி, பி.எஸ்.என்.எல். மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றுள்ளனர். இந்தியாவில் நாட்டின் வளர்ச்சிக்கு உற்பத்தி அவசியம். அதற்கு உதவியாக இருப்பவர் தொழிலாளி. ஆனால் அந்த தொழிலாளியின் வயிற்றில் இந்த அரசாங்கம் அடிக்கிறது. தொழிற்சங்க சட்டங்களை மாற்றுகிறார்கள்.
விலைவாசி உயர்வு அதிகரிக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய பொதுத்துறையை நாசமாக்குகிறார்கள். இதனை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும். மேலும், நிதித்துறைகளான வங்கி, இன்சூரன்ஸ் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். அதனை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது.
அரசு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் இன்னும் அதிகமான போராட்டங்கள் நடத்தப்படும். வங்கி வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் உள்ள 3 பண பரிவர்த்தனை நிலையங்களில் (சென்னை, டெல்லி, மும்பை) ரூ.21 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான காசோலைகள் முடங்கி இருக்கின்றன. சென்னை (தமிழகம்) பண பரிவர்த்தனை நிலையத்தில் மட்டும் ரூ.6 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான காசோலைகள் முடங்கியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.