பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 30 ஆயிரத்து 120 பேருந்துகள் பொங்கலுக்காக இயக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதில் சென்னையிலிருந்து இருந்து மட்டும் 16 ஆயிரத்து 75 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறினார். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தலா ஒரு சிறப்பு பேருந்து முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முன்பதிவு மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்ல சென்னையில் இருந்து நாளை (10.01.2020) முதல் ஜனவரி 14- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு இடங்களுக்கு 16,075 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மற்ற மாவட்டங்களின் முக்கிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 14,095 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.