இந்து மகா சபா தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அனைத்து இந்திய இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் மீது, அந்த அமைப்பின் பெண் நிர்வாகி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதையொட்டி ஸ்ரீகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து இந்திய இந்து மகா சபா என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் ஸ்ரீகண்டன் (வயது 50). இவரது அலுவலகம் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. இவரது அமைப்பில் மகளிர் அணி மாநில பொதுச்செயலாளராக பணியாற்றிய நிரஞ்சனி (40) என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்து மகா சபா அமைப்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். அந்த அமைப்பின் வேலை விஷயமாக நான் ஸ்ரீகண்டனோடு டெல்லிக்கு சென்று வந்துள்ளேன். ஸ்ரீகண்டன் அடிக்கடி எனது அழகை வர்ணிப்பார்.
ஆனால் முதலில் நான் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் என்னை கிண்டல் செய்வதாக நினைத்தேன். திடீரென்று அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.
கடந்த செப்டம்பர் மாதம் திடீரென்று எனது கையைப்பிடித்து கட்டி அணைத்து எனது உடலின் ரகசிய பாகங்களை தொடுவதற்கு முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்பி வந்துவிட்டேன். அதன்பிறகு அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
எனக்கு வர வேண்டிய ஊதியத்தை தரவில்லை. போராடி அந்த ஊதியத்தை பெற்றேன். இதனால் அந்த அமைப்பில் உள்ள பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்துவிட்டேன். தொடர்ந்து அவர் செல்போனில் பேசி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால் மன உளைச்சல் அடைந்தேன். அதனால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஆபத்து உள்ளது. அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தினார். இந்து மகா சபா அமைப்பின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்பட 5 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இந்தநிலையில் ஸ்ரீகண்டனின் மனைவி நான்சி (40) நேற்று மாலை திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது கணவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நிரஞ்சனி சொகுசாக வாழ்வதற்காக பலரை திருமணம் செய்து பணம் சம்பாதித்துள்ளார். எனது கணவரின் இரக்க சுபாவத்தை பயன்படுத்தி அவரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனது கணவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அந்த பெண் தான் பல வகையிலும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிரஞ்சனி பல்வேறு ஆண்களோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை நிருபர்களுக்கு காட்டினார்.