ஸ்னோடென்னை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப ரஷ்யா திட்டம்
அமெரிக்க உளவுத் துறை முன் னாள் ஊழியர் ஸ்னோடென்னை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப ரஷ்ய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு அமைப்பில் (என்.எஸ்.ஏ.) பணி யாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அந்த நாட்டின் ரகசிய ஆவணங் களைத் திருடி விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டார். இதில் ஐரோப்பா, ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் செல் போன் உரையாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டுக் கேட்டிருப்பது தெரியவந்தது.
எதிரி நாடுகள் மட்டுமன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் செல்போன் உரையாடல்களையும் அமெரிக்கா இடைமறித்துக் கேட்டிருப்பது அம்பலமானது. இதனால் பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டது.
இதனிடையே இந்த ரகசிய தகவல்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவில் இருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். அவருக்கு ரஷ்யா அடைக்கலம் அளித்தது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ரஷ்யாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் டொனால்டு ட்ரம்பும் அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
எனவே அமெரிக்காவுக்கு பரிசாக எட்வர்ட் ஸ்னோடென்னை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப ரஷ்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஸ்னோடென் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அமெரிக்காவுக்கு செல்ல நான் அஞ்சவில்லை என்று தெரிவித் துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ்