5, 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு மையத்தை மாற்றும் திட்டம் இல்லைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
5-ம் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளே தேர்வு மையங்களாக செயல்படும், தேர்வு மையங்களை மாற்றும் திட்டம் இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.270 கோடி
தமிழக சுகாதாரத்துறை இந்தியாவிலேயே முதல் இடத்தை பெற்று உள்ளது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால், தமிழகத்தில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. முதல்- அமைச்சரின் உத்தரவுப்படி ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரை ரூ.270 கோடி மதிப்பீட்டில் 4 வழிசாலை அமைக்கப்பட உள்ளது. கோபி நகராட்சியில் ரூ.52 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பது இருக்காது.
பொதுத்தேர்வுக்கு…
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு வரை நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கு தேர்வு மையங்களாக அந்தந்த பள்ளிகள் செயல்படும். வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது. வதந்திகளை நம்ப வேண்டாம். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அந்தந்த தாலுகாக்களில் அமைப்பது குறித்து தமிழக முதல்- அமைச்சர் முடிவு செய்வார். ஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகங்களில் சேர்ப்பதாக சொல்லவில்லை. சி.டி மூலமாகத்தான் வழங்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதால், அவர் மீது போலீஸ் நிலையங்களில் பலர் புகார் கொடுத்து வருகிறார்களே என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டபோது, இதுபற்றி நடிகர் ரஜினியைத் தான் கேட்க வேண்டும் என்றார்.