‘உங்களிடம் இருந்து எனக்கு உத்வேகம் கிடைக்கிறது’ – விருது பெற்ற குழந்தைகள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
புதுமை, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம், துணிச்சல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கிற 5 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பிரதம மந்திரி பால புரஸ்கார் விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது.
இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவற்றை கொண்டதாகும்.
இந்த ஆண்டு டெல்லியில் கடந்த 22-ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் இந்த விருதுகளை 49 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.
உலக அளவில் 50 மேஜிக் காட்சிகளை நடத்தியுள்ள 12 வயது தர்ஷ் மலானி, 11 வயது தபேலா கலைஞர் மனோஜ் குமார் லோஹர் உள்ளிட்டவர்கள் விருது பெற்றவர்களில் அடங்குவர்.
விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட விருப்பம் தெரிவித்தார். இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில், நேற்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடி, விருது பெற்ற குழந்தைகளை சந்தித்து அவர்களோடு மிகுந்த உற்சாகத்துடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சிறிது நேரத்துக்கு முன்பாக உங்களுக்கு நான் அறிமுகமானபோது, எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த சின்னஞ்சிறு வயதில் நீங்கள் எல்லாரும் பல்வேறு துறைகளில் முயற்சித்த விதம், செய்த பணிகள் வியப்பை அளிக்கிறது. இளம்தோழர்களான உங்களின் துணிச்சலான சாதனைகள் பற்றி நான் கேள்விப்படுகிறபோது, உங்களிடம் பேசுகிறபோது, எனக்கு உத்வேகமும், ஆற்றலும் கிடைக்கிறது என்று அவர் கூறினார்.
விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.