‘கசப்பான நிகழ்வுகளை மறந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’; ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து எதிரிகளுக்கு இடமளிக்காமல், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்காலிக இடையூறு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததால், அவர் சிறை செல்ல நேரிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக, முதல்–அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–
நாம் யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் கடந்த சில நாட்களாக நமது அம்மாவின் ஆட்சி மீதமுள்ள ஆண்டுகளுக்கு தொடர்வதில் தற்காலிக இடையூறு மட்டுமே ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கி, நாம் அனைவரும் ஒன்றுமையுடன் இருந்து அ.தி.மு.க.வுக்கு எவ்வித ஊறும் ஏற்படாமல் காத்து ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர தேவையானவற்றை நம் மனசாட்சிபடி உடனடியாக மேற்கொள்ள வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். இதுவே மானசீகமாக நமது அம்மாவிற்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
தொண்டர்களின் விருப்பம்
ஜெயலலிதா செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களாலும், மக்கள் அம்மா மீது வைத்திருந்த எல்லையில்லா அன்பினாலும் அண்மையில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பொதுமக்கள் இரண்டாவது முறையாக நம் அனைவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பினை வழங்கினார்கள். காலத்தின் சதியினால் அம்மா நம்மிடையே இருந்து தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அம்மா நம்மிடையே இல்லாத சூழ்நிலையில், பொதுமக்கள், குறிப்பாக அ.தி.மு.க. வெற்றிக்காக அல்லும், பகலும் கண் அயராது உழைத்த நமது தொண்டர்கள் அனைவரும் எதை விரும்புகின்றனர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர்கள் காட்டும் வழியிலேயே செல்வது தான் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமது அனைவரின் கடமையாகும். இதுவே நமது மாநிலத்திற்கும் நலம் சேர்க்கும். ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர அனைவரது ஆதரவும் நமக்கு இன்றியமையாததாகும்.
கசப்பான நிகழ்வுகள்
எனவே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதுள்ள ஒட்டுமொத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவு எடுத்தால், அது கட்சி ஒற்றுமைக்கும், ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்வதற்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நல்ல முடிவு எடுத்து செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
மேலும், தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் இருந்து அவரவருக்குரிய முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவதில் எவ்வித தயக்கமும் இருக்காது என்பதை நான் இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், நம் எதிரிகள், நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பவர்களை எம்.ஜி.ஆர். ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் என்றும் மன்னிக்காது. அம்மா தங்கள் வாழ் நாள் முழுவதும் எந்த கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, அதை தொடர்ந்து கடைப்பிடித்து, அவர் விட்டு சென்ற பணிகளை நாம் ஒற்றுமையுடன் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
நன்றி : தினத்தந்தி