அரசியல் குழப்பத்தை தவிர்த்த கவர்னர்
சசிகலாவை, ஆட்சி அமைக்க, பல தரப்பில் இருந்து நெருக்கடி வந்த போதும், பொறுமை காத்த கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தில், ஏற்பட இருந்த அரசியல் குழப்பத்தை தவிர்த்துள்ளார்.
கவர்னர் அமைதி :
அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டதும், பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ‘தன்னை முதல்வர் பதவியேற்க அழைக்க வேண்டும்’ என, கவர்னருக்கு, சசிகலா கோரிக்கை விடுத்தார். ஆனால், ‘என்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்று விட்டனர்’ என, முதல்வர் பன்னீர்செல்வம், அதிரடியாக அறிவித்தார். ‘சசிகலாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்’ என்ற தகவல் வெளியானது. இதை அறிந்து தான் சசிகலா, முதல்வராக துடித்தார். அதை சரியாக கணித்த கவர்னர் அமைதி காத்தார்.
‘அரசியல் அமைப்பு சட்டப்படி, சசிகலாவை பதவியேற்க அழைக்க வேண்டும்’ என, தமிழகத்தில், சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. சசிகலாவிற்கு எதிராக, வழக்கு தொடர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியே, கவர்னரை சந்தித்து, இதை வலியுறுத்தினார். ஆனாலும், கவர்னர் அசைந்து கொடுக்கவில்லை. தீர்ப்பு வரும் வரை, காத்திருக்கும் தன் முடிவை வெளியில் அறிவிக்காவிட்டாலும், அதில், உறுதி காட்டினார். பல்வேறு நெருக்கடிகள் வந்த போதும் அமைதி காத்தார். அவர், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைத்திருந்தால், அவர் முதல்வராகி, தீர்ப்பு வந்ததும் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.
நடவடிக்கை :
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜானகி, 24 நாட்களில் முதல்வர் பதவியை இழந்து, குழப்பம் ஏற்பட்டது போன்ற நிலை ஏற்பட்டிருக்கும். பல முனை நெருக்கடி களுக்கு பணியாமலும், பதற்றம் காட்டாமலும், தன் சாதுர்யமான நடவடிக்கைகளால், கவர்னர் அதை தவிர்த்தார். ‘இதன் மூலம், முதல்வர் பதவியின் கண்ணியம் காப்பாற்றப்பட்டு உள்ளது’ என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி : தினமலர்