தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது – ஈரோட்டில் பாஜக தலைவர் ஜேபி நட்டா பேச்சு
ஈரோடு,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று ஈரோடு மாவட்டத்தில் பிரசாரத்தில் பங்கேற்றார்.
பிராசார கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா, இலங்கையில் உள்ள ஜப்ஃனா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி தான். குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட வீடுகளை அவர் பார்வையிட்டு அவற்றை மறுகட்டமைப்பு செய்தார். அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கரை இலங்கைக்கு அனுப்பி தமிழ் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார்.
தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக அளவில் வழங்கப்பட்டது தமிழகத்திற்குதான். பிரதமர் மோடி தமிழகத்தை பிரதான நீரோட்டத்தில் கொண்டு வந்துள்ளார். 13-வது நிதிக்குழுவில் தமிழகம் 94 ஆயிரம் கோடி ரூபாய் தான் பெற்றது. ஆனால், பிரதமர் மோடி தலைமையில் 14-வது நிதிக்குழுவில் தமிழகம் 5 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது 4.5 மடங்கு அதிகம் ஆகும்’ என்றார்.