தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை
சென்னை:
தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கிஷன்ரெட்டி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதுதவிர வேட்பாளர்களும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் உள்ளனர். சில தொகுதிகளில் நடிகர், நடிகைகளும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் 234 தொகுதிகளிலும் ஒவ்வொரு வேட்பாளரும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். விடுபட்டு போன பகுதிகளுக்கு சென்று தற்போது ஓட்டு கேட்டு வருகின்றனர்.
பிரசாரத்தின் கடைசி நாளான நாளை (4-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை மாலை 7 மணியுடன் பிரசாரம் முடிவடைந்ததும் தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியே செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.
அதன்பிறகு போலீசார் துணை ராணுவப் படையினர் வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 6-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். இதையொட்டி இப்போது வீடு வீடாக ‘பூத்’ சிலிப் வழங்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.