உலக வர்த்தக நிறுவனத்துக்கு புது வடிவம் அவசியம்
உலக வர்த்தக நிறுவனத்தின் (டபிள்யு.டி.ஓ.) தலைமை இயக்குநர் ராபர்ட் அசெவெடோவின் சமீபத்திய இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக வர்த்தக நிறுவனம் உருவாக்கிய கட்டமைப்பில், வர்த்தக விதிகள் மாற்றப்பட்டுவரும் வேளையில் இப்பயணம் அமைந்தது. பசிபிக் கடலோர நாடுகளின் கூட்டு வர்த்தக ஒப்பந்த விதிகள்தான் உலக வர்த்தக விதிகளுக்கும் அடிப்படையாகக் கருதப்படுகிறது. பசிபிக் கடலோர நாடுகளின் கூட்டு ஒப்பந்த ஏற்பாட்டை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரும்பவில்லை.
நைரோபியில் 2015-ல் நடந்த உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக – பொருளாதார அமைச்சர்கள் மாநாட்டின்போதே, அந்த அமைப்பைச் செல்லாக் காசாக்க அமெரிக்கா முயற்சி எடுத்தது. தோஹா சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து எந்த முடிவுமே எடுக்கப்படாமல் அந்த மாநாடு முடிந்தது. அந்த மாநாடு கூடியதே அது குறித்து முடிவு எடுக்கத்தான். உலக வர்த்தக நிறுவன அமைப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை உறுப்பினர்களான வளரும் நாடுகளின் தேவைகளை இது கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கிய எதிர்பார்ப்பு. ஆனால், நைரோபி மாநாட்டில் தோஹா பேச்சுவார்த்தையை எதிர்காலத்தில் எப்படிக் கொண்டுசெல்வது என்று தீர்மானிக்கத் தவறியதால், உலக வர்த்தக அமைப்பே இனி மதிப்புள்ள அமைப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. காரணம், அதற்கென்று செயல்திட்டம் இல்லை.
பொருத்தமான பெயரா?
இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டிய முன்னுரிமைப் பணிகள் என்பதைத் தீர்மானிப்பவையாகப் பணக்கார நாடுகளே இருப்பதால், இதை உலக அமைப்பு என்று அழைப்பது சரியா, இதனால் எங்களுக்கு என்ன பயன் என்று பல வளரும் நாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே கேட்டு வருகின்றன. முக்கியமான சில வர்த்தக ஒப்பந்தங்களைத் தங்களுடைய தேவைகளுக்கேற்பத் திருத்தும் நடவடிக்கைகளை வளரும் நாடுகள் எடுத்தபோது அவை நிராகரிக்கப்பட்டன. மிகவும் பின் தங்கிய நாடுகள் தங்களுடைய நாட்டில் உற்பத்தி செய்தவை அல்லது விளைந்தவை போன்றவற்றை மிகவும் குறைந்த அளவிலாவது சர்வதேசச் சந்தையில் விற்க முயன்றபோது வெவ்வேறு காரணங்களைக் கூறி அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.
உணவு தானியக் கையிருப்பு
உணவு தானியக் கையிருப்பு, அறிவுசார் சொத்துரிமை என்ற இரண்டு முக்கிய விஷயங்களில் வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும் வளரும் நாடுகளுக்கு இடையூறாகவும்தான் விதிகள் வகுக்கப்பட்டன. வளர்ந்த நாடுகளுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட விதிகள் சிறிய விவசாயிகளின் நலன்களை அப்பட்டமாகப் புறக்கணித்துவிடுகிறது. உணவு தானியத்துக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடாமலிருக்க, இறையாண்மையுள்ள நாடுகள் தங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவு தானியங்களைக் கையிருப்பில் வைத்துக்கொள்ள உலக வர்த்தக விதிகள் திருத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. மானிய விலையில் தங்களுடைய மக்களுக்கு எப்படி உணவு தர வேண்டும் என்று அந்தந்த அரசுகள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்தியாவில் பொதுவிநியோக அமைப்பு (ரேஷன் கடைகள்) மூலம் மானிய விலையில் அரிசி, கோதுமை போன்றவை ஏழைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஆனால், உலக வர்த்தக அமைப்போ விளையும் எல்லா வேளாண் பொருட்களும் முழு அளவில் சந்தைக்குக் கொண்டுவந்து விற்கப்பட வேண்டும் என்கிறது. உலக வர்த்தக நியதிகளை இந்தியா மீறினாலும்கூட ஏழைகளின் பசியைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்படுவதால் அதை ‘அமைதிக்கான ஏற்பாடாக’க் கருதி விலக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. உணவுப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு போதிய அளவு அரிசி, கோதுமை போன்றவற்றைக் கையிருப்பில் வைத்துக்கொள்ள அனுமதிக்கும் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று இந்தியா கோரியபோது வளர்ந்த நாடுகள் மவுனம் சாதித்தது குறிப்பிடத்தக்கது.
தாமதமான மின் வணிகம்
போனஸ் அயர்ஸ் நகரில் 2017 டிசம்பரில் நடை பெறவுள்ள 11-வது அமைச்சர்கள் மாநாட்டின்போது பணக்கார நாடுகள் தங்களுக்குச் சாதகமான அம்சங்களை மட்டும் சேர்க்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இம் முறை உலக வர்த்தகப் பேச்சுகளில் மின் வணிகம், முதலீடு குறித்துப் பேசப்படும். சர்வதேச வர்த்தகப் பேரவை (ஐசிசி), ஜி-20 நாடுகளின் வர்த்தகப் பிரிவு (பி-20) ஆகியவை இதை ஆதரிக்கின்றன. 2016 செப்டம்பரில் இவ்விரு அமைப்புகளும் முன்வைத்த யோசனைகளில் உலக வர்த்தகப் பேச்சுகளில் மின் வணிகம் பற்றிப் பேச வேண்டும் என்பதும் ஒன்று. பெரிய, சிறிய, குறு தொழில் நிறுவனங்கள் போட்டியிட சமகளம் ஏற்பட மின் வணிக முறைக்கு மாறுவது அவசியம் என்று அந்த யோசனை வலியுறுத்துகிறது. இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்தைகளை அடைவதில் உள்ள தடைகள் நீங்கும். வளரும் நாடுகள் திறன் வளர்ப்பு ஆற்றலை உருவாக்கிக்கொள்ள உலக வர்த்தக அமைப்பு உதவ வேண்டும் என்பதும் கோரிக்கைகளில் ஒன்று. வெறும் மின் வணிகத்தால் சந்தைகளை அடையும் வாய்ப்பு மட்டும் சிறு, குறு, பெரிய தொழில் நிறுவனங்கள் தொழில் நடத்தப் போதுமானதாக இருக்காது. குறிப்பிட்ட நடைமுறைகள் மூலம் அவற்றுக்கென்று தனி நிதியுதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை. நிதி ஆதாரம் என்பது குறு, சிறு, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அவசியம். வளரும் மற்றும் ஏழை நாடுகளைச் சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நிதியுதவி பெற தனி ஒப்பந்தம் தேவை என்று உணரப்பட்டிருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்திடம் நிதி வசதி அளிக்கும் அளவுக்கு எந்த அமைப்பும் இல்லை. எனவே, இதைச் சாதிப்பது பெரிய சவாலாக இருக்கப்போகிறது.
மின் வணிகத்துக்கு உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வலுவான அங்கீகாரம் அளித்திருக் கிறார். உலக அளவில் 43% வீடுகளில் இணையதள வசதி ஏற்பட்டிருப்பதால், மின் வணிகம் சாத்தியமே என்பதால் இதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்து வலுத்துவருகிறது. ஆனால், அசெவெடோ கூறும் புள்ளிவிவரம் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை. வளரும் நாடுகள் பலவற்றில் 12.6%, வறிய நாடுகளில் 9.4% என்ற அளவில்தான் இணையதள வசதி நிலவுகிறது. நடுத்தர வகுப்பாரில் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் கூட உலக சராசரிக்கும் குறைவாகவே இணையதள இணைப்புகள் இருக்கின்றன. இந்நிலையில், மின் வணிகம் கையாளப்பட்டால் யாருக்கு அது சாதகமாக இருக்கும் என்பது சொல்லாமலே புரியும்.
கருத்து வேறுபாடு
உலக வர்த்தக அமைப்பு தொடங்கிய காலத்திலிருந்தே தொழில் முதலீடுகள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகளும் தொடர்கின்றன. முதலீடுகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியபோது, வளரும் நாடுகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. இப்போது முதலீடு செய்யும் நாடுகளுக்கு உதவுவதாக இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படுவது குறித்துப் பேசப்படுகிறது. முதலீடு செய்யும் நாட்டைச் சேர்ந்தவர், தான் முதலீடு செய்த நாட்டில் தனது வருவாய் அல்லது லாபத்தைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், தன்னுடைய நாட்டுச் சட்டப்படி அதைத் தீர்த்துக்கொள்வது பற்றி பேச்சு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தளையிலிருந்து இந்தியா வெளியேறியிருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்தவர் வழக்கு தொடுக்கும் உரிமை முழுமையாகத் தரப்பட்டால், பாதிப்பு அளவுக்கு மட்டுமே இழப்பீடு என்று வரையறுக்கப்படுகிறது. மின் வணிகமும், முதலீடும் உலக வர்த்தக நிறுவனத்தில் சேர்க்கப்படுவதால் பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும். இப்போதுள்ள உலக வர்த்தக முறை பணக்கார நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பை அளிக்கவல்ல புதிய கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வரலாறு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய உலக வர்த்தக அமைப்பு நிர்வாகச் சூழலுக்கு அசெவெடோ மூல காரணமாக இருப்பாரா?
நன்றி : தி இந்து தமிழ்