ஐ.பி.எல். போட்டி: 50 அரை சதங்கள் அடித்து டேவிட் வார்னர் சாதனை
புதுடெல்லி,
14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 23வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பல சாதனைகளை புரிந்துள்ளார். தனது 148வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி ஐ.பி.எல்.லில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் அவர் கடந்துள்ளார். நேற்றைய போட்டியில் விளையாடுவதற்கு முன் இந்த சாதனையை புரிவதற்கு அவருக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது.
வார்னருக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் அரை சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டெல்லி அணியின் ஷிகர் தவான் (43) 2வது இடத்திலும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி (40) 3வது இடத்திலும் உள்ளனர்.
சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் அடித்த 2 சிக்சர்கள் அவரது சாதனை வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. ஐ.பி.எல்.லில் 200 சிக்சர்களை அவர் விளாசியுள்ளார். இதனால் 200 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்த வீரர்களின் வரிசையில் 8வது இடத்தில் வார்னர் உள்ளார்.
இதுதவிர வெளிநாட்டு வீரர்களில் கிறிஸ் கெய்ல் (354 சிக்சர்கள்), ஏபி டி வில்லியர்ஸ் (245 சிக்சர்கள்) மற்றும் கீரன் பொல்லார்டு (202) ஆகியோருக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார்.