“திடீர் மழைப்பொழிவுக்கு இதுதான் மிக முக்கியமான காரணம்” – நவ.6 மழை குறித்து ரமணன் விளக்கம்
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாகவே அதீத மழை பொழிவு இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டுமே ஒரே இரவில் சுமார் 20 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.
இந்நிலையில், இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் 2015-இல் சென்னையில் பொழிந்த மழை, 2018-இல் கேரளாவில் பதிவான மழை, உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த மழை என வழக்கத்திற்கு மாறாக மழை பொழிவு கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
இதற்கான தீர்வு தான் என்ன என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இதற்கான விளக்கத்தை இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் ‘தொடரும் பெருமழை.. வடியாத தண்ணீர்.. எங்கே தவறு? என்ன தீர்வு?’ என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
“வங்கக் கடலில் உள்ள மேலடுக்கு சுழற்சி தான் இந்த மழை பொழிவுக்கு காரணம். அது தரை நிலை தாழ்வு பகுதியாக வட தமிழகத்தின் கடலோர பகுதிகளை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கணினி சார்ந்த கணிப்புகள் தான் இவை. இந்த அதீத மழைக்கு காரணம். வரும் நாட்களில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 15 சென்டி மீட்டர் வரை மழை பொழிவு இருக்கலாம். அதன் தொடர்ச்சியாக வேலூர் பகுதிகளில் மழை இருக்கும்.
6 மற்றும் 7-ஆம் தேதியன்று அதிக மழை பொழிய காரணம் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் காணப்பட்ட மேலடுக்கு சூழற்சிகளின் மேற்கு மற்றும் கிழக்கு திசை காற்று இணைவதனால் மழை மேகங்கள் உருவாகி மழை பொழிய காரணமாக அமைந்துள்ளன. மேகங்கள் நகராமல் ஒரே இடத்தில் இருந்தபடி ஒரு மணி நேரத்தில் சுமார் 10 சென்டி மீட்டர் வரை பொழிகிறது என்றால் அதனை மேக வெடிப்பு (Cloud Burst) என்று சொல்லலாம். ஆனால் இந்த மழைக்கு காரணம் இரு திசைகளின் காற்று ஒரே கோட்டில் இணைந்ததால் ஏற்பட்டது.
வரும் 10 மற்றும் 11-ஆம் தேதி அன்று வட தமிழக கடலோர பகுதிகளில் மழை பொழிவு இருக்கலாம். அதனால் கடலோர பகுதிகள் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம்” என தெரிவித்துள்ளார்.