திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா
திருவண்ணாமலை,
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். வழக்கமாக திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வட மாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்று திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படும்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி விழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டு கோவிலின் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற உள்ளது.
இந்தாண்டு தீபத்திருவிழா இன்று காலை கோவில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 63 அடி உயர தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கொடியேற்று விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
எனவே, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் வீதிஉலாவின் போது சாமிக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது.