Breaking News
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் சென்னைக்கு எச்சரிக்கை

சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணியளவில் அது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்தது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைகிறது. பின்னர் வலுவடைந்த நிலையிலேயே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது.

இது இன்று பிற்பகலில் இருந்து தமிழகத்தின் கடலோர பகுதியை நோக்கி நகரும். இன்று இரவு தமிழகத்தின் கடலோர பகுதிக்கு மிக அருகில் வந்து விடும். நாளை வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு- வட மேற்கு திசை நோக்கி நகரும். நாளை மாலை கடலூர் அருகே காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்துக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் என 3 வகையான எச்சரிக்கைகளை மாவட்டம் வாரியாக விடுத்துள்ளது.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று அதி பலத்த மழை தரும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் அதி பலத்த மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) அதி பலத்த மழையை தரும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யும்.

கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், மற்ற மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரில் இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும். இன்று பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும். நாளை (11-ந்தேதி) சில பகுதிகளில் அதி பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.