Breaking News

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரிப்பது பெரும் பிரச்சினையாக நிலவுகிறது. வாகன நெரிசல் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.

இதற்கிடையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தீபாவளியான நேற்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இன்று டெல்லியில் நகர் முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. பகல் வேளைகளிலேயே சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை உள்ளது. இன்றைய நிலவரப்படி டெல்லியில் காற்று தர குறியீடு மோசமான கட்டத்தில் உள்ளது. இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 499 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஆனந்த விகார், ஜகாங்கிர்புரி, சாந்தினி சவுக், லோடி சாலை, இந்திரா காந்தி விமான நிலையம் உள்ளிட்ட 15 முக்கிய மண்டலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. டெல்லியை ஒட்டி உள்ள நொய்டா, குருகிராம், காசியாபாத், கிரேட்டர் நெய்டாவிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது. இன்னும் ஒரு வாரம் வரை டெல்லியில் இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.