Breaking News
77 மந்திரிகளும் 8 குழுக்களாக பிரிப்பு: ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த மோடி அதிரடி…!

புதுடெல்லி,

பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கண்ணும், கருத்துமாக உள்ளார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரிசபையை மாற்றி அமைத்தார்.

மந்திரிகளை அழைத்து அவ்வப்போது ‘சிந்தனை அமர்வு’ என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு கூட்டமும் சுமார் 5 மணி நேரம் நடைபெறுகிறது. இதுவரை 5 கூட்டங்களை நடத்தி உள்ளார். தனிநபர் செயல்திறன், திட்ட அமலாக்கம், மந்திரிசபை செயல்பாடு, கட்சி ஒருங்கிணைப்பு, நாடாளுமன்ற நடைமுறைகள் என ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றிய கூட்டத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கூட்டங்கள், மோடி அரசின் செயல்திறன் மற்றும் திட்ட அமலாக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனை அடிப்படையில், மொத்தம் உள்ள 77 மந்திரிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 9 முதல் 10 மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மூத்த மந்திரி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் முக்கிய திட்டங்களை பற்றிய செயல்பாடுகளை தெரிவிக்க ஒவ்வொரு மந்திரியின் அலுவலகத்திலும் வலைத்தளம் உருவாக்குதல், ஒவ்வொரு மந்திரியும் எடுத்த முடிவுகளை கண்காணிக்கும் அமைப்பு உருவாக்குதல், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நிறைவேற்றப்படும் திட்டங்களின் விவரங்கள் அடங்கிய விவரத்தொகுப்பை உருவாக்குதல் உள்ளிட்டவை இக்குழுக்களுக்கு அளிக்கப்பட்ட பணிகள் ஆகும்.

மேலும், ஆராய்ச்சி, தகவல் தொடர்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் நிபுணத்துவம் பெற்ற 3 இளம் தொழில்நுட்ப நிபுணர்களை கொண்ட குழு அமைப்பதும் ஒரு குழுவின் பணி ஆகும். ஓய்வுபெற்ற அதிகாரிகளின் யோசனைகள் மற்றும் அனுபவங்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.