16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 6 மாதங்களில் 400 பேர் பாலியல் வன்முறை
மும்பை
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் திருமணம் செய்த 6 மாதங்களில் போலீசார் உள்பட 400 க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து உள்ளனர். அவர் புகார் அளிக்க முயன்றபோது ஒரு போலீஸ்காரரால் பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டார். தற்போது அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மாவட்ட போலீஸ் சூப்புரெண்டு ராஜா ராமசாமி கூறியதாவது:-
பீட் மாவட்டத்தில் திருமணமான சிறுமி ஒருவர் கடந்த 6 மாதங்களில் 400 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் புகார் தொடர்பாக குழந்தை திருமணத் தடைச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
சிறுமியின் கதை என்ன…?
சிறுமி சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை இழந்து உள்ளார். எட்டு மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்து உள்ளார். சிறுமி அவரது கணவர் மற்றும் மாமியாரால் தாக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டு உள்ளார்.
இதனால், அங்கிருந்து ஓடிப்போய் மீண்டும் தந்தையை சந்தித்து உள்ளார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சிறுமி பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையில் உள்ள பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்து உள்ளார். இதை தொடர்ந்து அங்கு அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாகத்தொடங்கினார். 6 மாதங்களில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் அவரை பாலியல் வன்முறை செய்து உள்ளனர்.
இது குறித்து சிறுமி குழந்தைகள் நலக் குழுவிடம் அளித்த அறிக்கையில், “நான் பலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். பலமுறை அம்பஜோகை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும், குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, ஒரு போலீஸ்காரரால் நான் பாலியல் துன்புறுத்தப்பட்டேன் என கூறி உள்ளார்