ஏடிபி தொடரின் பிரதான சுற்றில் வெற்றி பெற்று சாதனை படைத்த பார்படாஸின் டேரியன் கிங்
மெம்பிஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள பெர்னார்டு டாமிக்கை வீழ்த்தி சாதனை படைத்தார் பார்படாஸ் வீரர் டேரியன் கிங்.
அமெரிக்காவின் மெம்பிஸ் நகரில் மெம்பிஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் போட்டி தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் பெர்னார்டு டாமிக் முதல் சுற்றில் 140-வது இடத்தில் உள்ள பார்டாஸின் டேரியன் கிங்கை எதிர்த்து விளையாடினார்.
இதில் டேரியன் கிங் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் பெர்னார்டு டாமிக்கை வீழ்த்தினார். 41 வருடங்களாக நடத்தப்படும் இந்த தொடரில் முதன் முறையாக பங்கேற்ற பார்படாஸ் வீரர் என்ற பெருமையை பெற்ற டேரியன் கிங் தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றார். இதன் மூலம் ஏடிபி தொடரின் பிரதான சுற்றில் வெற்றி கண்ட முதல் பார்படாஸ் வீரர் என்ற சாதனையையும் டேரியன் கிங் படைத்துள்ளார்.
டேரியன் கிங், இந்த தொடரில் தகுதி சுற்றின் மூலமே பிரதான சுற்றுக்கு முன்னேயிருந்தார். ஏடிபி தொடர்களில் அவர் பிரதான சுற்றில் நுழைவது இது 2-வது முறையே. இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டு வாஷிங்டன் போட்டியில் விளையாடிய அவர் முதல் சுற்றுடன் வெளியேறிருந்தார்.
24 வயதான டேரியன் கிங், பெர்னாடுக்கு எதிரான ஆட்டத்தை 66 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டுவந்தார். வெற்றி குறித்து டேரியன் கிங் கூறும்போது,
‘‘5-ம் நிலை வீரரான பெர்னாடுக்கு எதிராக விளையாடுவது என்பதே பெரிய கனவுதான். இந்த வெற்றியின் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. பார்படாஸில் இருந்து வந்து இதுபோன்ற முன்னணி வீரர்களுக்கு எதிராக விளையாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏடிபி தொடரில் முதல் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.
டேரியன் கிங் தனது 2-வது சுற்றில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சியஸை எதிர்த்து விளையாடுகிறார்.
நன்றி : தி இந்து தமிழ்