ரூ.5 லட்சம் கோடி வங்கிக்கடனை மீட்டுள்ளோம்: பிரதமர் மோடி பெருமிதம்
டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும் ஒரு புதிய பாய்ச்சலுக்கான புதிய தீர்மானத்தை எடுக்கும் ஒரு நேரம் வரும். அதன்பின் அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஒட்டுமொத்த தேசத்தின் பலமும் ஒன்று சேரும். அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்படும் சூழலில் தான் இப்போது இருக்கிறோம்; இனி துவங்க வேண்டியதுதான். கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் வங்கித் துறையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் இந்தத் துறைக்கு எல்லா வகையிலும் அளிக்கப்பட்ட ஆதரவு ஆகியவை நாட்டில் வங்கித்துறை மிகவும் வலுவான நிலையில் இருக்க வழிவகுத்துள்ளது.
வங்கிகளின் நிதிநிலை தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் இருந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழிகளைக் கண்டோம். சட்டங்களைச் சீர்திருத்தினோம், கடன் மீட்பு தீர்ப்பாயத்தை வலுப்படுத்தினோம். வங்கிக் கடனைப் பெற்றுக் கொண்டு ஒருவர் தப்பிச் சென்றால், அது நிறைய விவாதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு துணிச்சலான அரசாங்கம் அவர்களை மீட்டு கொண்டு வரும்போது, யாரும் அதைப் பற்றி விவாதிப்பதில்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட கடனில் தற்போது வரை 5 லட்சம் கோடி ரூபாய் மீட்டுள்ளோம்.
நமது வங்கித்துறையின் பலம் சர்வதேச அளவில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும். குடிமக்களின் உற்பத்தி திறனை வெளிக்கொண்டுவரவேண்டும். ஜன்தன் யோஜனா திட்டம் ஏழைகளுக்கு மிகவும் உதவியது. இன்னும் பல ஜன்தன் வங்கி கணக்குகளை துவக்க வேண்டும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும். அவர்கள் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரம். இவ்வாறு அவர் பேசினார்.