Breaking News
திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை: சிறுவர்கள் நடத்தியது எப்படி…? பதறவைக்கும் சம்பவம்
திருச்சி,
புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களை பிடிக்க விரட்டி சென்றபோது திருச்சி நாவல்பட்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்தது எப்படி…?
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தைவெளியைச் சேர்ந்த எஸ்.பூமிநாதன் (51), திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக திருவெறும்பூர் அருகேயுள்ள சோழமாதேவி கிராமத்தில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார். மகன் குகன் பிரசாத், அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
பூமிநாதனும் தலைமைக் காவலர் சித்திரவேலும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ரோந்து சென்றுள்ளனர். பூலாங்குடி காலனி பகுதியில் 4 பேர் 2 பைக்குகளில் வந்தனர். அவர்கள் ஆடு ஒன்றையும் வைத்திருந்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை நிறுத்தி விசாரிக்க பூமிநாதன் முயன்றார். ஆனால், அவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.
இதையடுத்து பூமிநாதனும், சித்திரவேலும் தங்களின் இருசக்கர வாகனத்தில் தனித்தனியாக துரத்திச் சென்றனர். போலீஸார் துரத்துவதைப் பார்த்ததும் 4 பேரும் வெவ்வேறு சாலையில் தப்பிச் சென்றனர். ஆடு கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை போலீஸார் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
சித்திரவேல் சென்ற வாகனத்தைவேகமாக ஓட்ட முடியாததால் பின்தங்கினார். ஆனால், பூமிநாதன் விடாமல் விரட்டிச் சென்றார். திருவெறும்பூர் – கீரனூர் சாலையில் திருச்சி மாவட்ட எல்லையைத் தாண்டி புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதியிலும் அவர்களை விரட்டிச் சென்றார். கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி கிராமத்தில் இருந்து திருச்சி -புதுக்கோட்டைதேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தார் சாலையில் இருந்த 54-ஏ ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், அதற்குமேல் செல்ல முடியாமல் இருவரும் பூமிநாதனிடம் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மடக்கிப் பிடித்த பூமிநாதன், சித்திரவேலை தொடர்பு கொண்டு உடனே அங்கு வருமாறு கூறியுள்ளார். இருட்டில் வழிமாறிச் சென்ற சித்திரவேல், சேறும் சகதியுமான சாலையில் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து, தன்னுடன் பணிபுரியும் மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளரான கீரனூர் கணேஷ் நகரில் வசிக்கும் சேகருக்கு தகவல் தெரிவித்த பூமிநாதன், அவரை அங்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த சேகர், தலையில் வெட்டுக்காயங்களுடன் பூமிநாதன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக நவல்பட்டு போலீஸாருக்கும், கீரனூர் போலீஸாருக்கும் தகவல் அளித்தார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், டிஐஜி சரவணசுந்தர், திருச்சி எஸ்பி சுஜித்குமார் (புதுக்கோட்டை பொறுப்பு) உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பார்வையிட்டனர்.
பூமிநாதனிடம் பிடிபட்டவர்கள் ஆடு திருடர்கள் என்பதும், அவர்கள்தான் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஆடு திருடர்களை பிடித்ததும், சக போலீசாரின் உதவிக்காக பூமிநாதன் காத்திருந்தார். அப்போது, திருடர்கள் 2 பேரும் தப்ப முயன்றுள்ளனர். அவர்களுடன் தனியாளாக பூமிநாதன் போராடியுள்ளார். திருடர்கள் தங்களது வாகனத்தில் வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியை எடுத்து பூமிநாதனின் பின் தலையில் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். கொலையாளிகள் தூக்கி எறிந்த பூமிநாதனின் தொப்பி, வாக்கி-டாக்கி, செல்போன் மீட்கப்பட்டது’’ என்றனர்.
பூமிநாதனின் உடல் சோழமாதேவி கிராமத்தில் நேற்று மாலை துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.