பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை – அமெரிக்கா
வாஷிங்டன்,
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019-ல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளை 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இதற்கிடையில், எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவுக்கு விநியோகிக்கும் பணியை ரஷியா தொடங்கியுள்ளது. திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருவதாக ரஷிய அதிகாரி கடந்த 14-ம் தேதி கூறினார்.
அதேவேளை, ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்க தொடக்கம் முதலே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி ரஷியாவிடம் இருந்து இந்தியா ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ளது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்கலாம் என தகவல் வெளியானது. மேலும், நட்பு நாடு என்பதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், எஸ்400 விவகாரத்தில் பொருளாதார தடை விதிப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கும்பட்சத்தில் அது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம் என்பதால் பெரும்பாலும் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.