இந்தியாவில் முதல்முறையாக ஆண்களை விட பெண்களே அதிகம்- ஆய்வில் தகவல்
புதுடெல்லி:
இந்தியாவில முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 நடத்தப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 88.6 சதவீத குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் பிறந்துள்ளன. முந்தைய சர்வேயில் இது 78.9 சதவீதமாக இருந்தது. இது இந்தியா ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் பிறப்பதை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது.
* இந்தியாவில் முதல்முறையாக ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்கிற அளவுக்கு பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியா, வளர்ந்த நாடுகளுடன் சேருகிறது.
* பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களாக குஜராத், மகாராஷ்டிரா, அருணாசலபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளன.
* குழந்தைகள் பிறப்பை பொறுத்தவரையில், 2015-16-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகள் என இருந்தது. இது 2019-20-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்ற அளவுக்கு அதிகரித்தது.
* மொத்த கருத்தரிப்பு விகிதம், ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்கிற அளவை எட்டி உள்ளது. முந்தைய சர்வேயில் இது 2.2 ஆக இருந்து இருக்கிறது. இது பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் குறைவான எண்ணிக்கையில் குழந்தை பெறுகின்றனர், குடும்பக்கட்டுப்பாடு, சற்றே தாமதமாக திருமணம் செய்தல் போன்ற அறிவினை பெண்கள் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது.
* குழந்தைகள் பிறப்பு பதிவை பொறுத்தமட்டில் 5 வயது வரையில் பதிவு செய்வது 89.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய சர்வேயில் இது 79.7 சதவீதம் ஆகும்.
* 41 சதவீத குடும்பங்களில் குறைந்தது ஒருவராது சுகாதார காப்பீடு செய்துள்ளனர். முந்தைய சர்வேயில் இது 28.7 சதவீதமாக இருந்துள்ளது.
* தற்போது திருமணமான 15-49 வயது பெண்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது 66.7 சதவீதத்தினர் கருத்தரிப்பை தள்ளிப்போட அல்லது கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை (கருத்தடை முறைகள்) பயன்படுத்துகின்றனர்.
* நாட்டில் தற்போது திருமணமான 15-49 வயது பெண்களின் குடும்ப கட்டுப்பாட்டு தேவை 9.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2015-16-ல் 12.9 சதவீதமாக இருந்துள்ளது.
* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கடந்த சர்வேயில் இருந்து இந்த சர்வயேில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.