சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரும் ரஷியா
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் வரிசை தடுப்பூசிகளை ரஷியா தயாரித்து வருகிறது. அந்தவகையில் ஸ்புட்னிக்-வி, ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசிகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன.
இந்த வரிசையில் 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு போடும் வகையில் ஸ்புட்னிக் எம் தடுப்பூசியை ரஷியா தயாரித்து உள்ளது.
இந்த தடுப்பூசியின் அங்கீகாரத்துக்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பை ரஷியா நாடியுள்ளது. இது தொடர்பாக கடந்த 24-ந்தேதி ரஷிய சுகாதார அமைச்சகம் பதிவு செய்திருப்பதாக ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் கூறியுள்ளது.
இதற்கு சாதகமான முடிவு இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், இந்த தடுப்பூசி இந்தியாவில் பதிவு செய்யப்படும் சிறுவர்களுக்கான முதல் தடுப்பூசியாக இருக்கும் என அந்த நிதியம் கூறியுள்ளது.
இது குறித்து நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், ‘இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள ஏராளமான ஒப்பந்தங்கள் மூலம் எங்கள் உற்பத்தி திறன் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் இளம் தலைமுறையினர் உள்பட ஏராளமான உயிர்களை பாதுகாப்பதற்கு ஸ்புட்னிக் லைட் மற்றும் ஸ்புட்னிக் எம் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று கூறினார்.