Breaking News
கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணம்- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி:

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரசின் கொடும் பயணத்தில் பல லட்சம் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி நம் நாட்டில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 537 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று காலை வரை, 128.76 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவின் பவார் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:-

‘நாட்டில் 3 நிறுவனங்களின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 946 பேர் இறந்திருக்கின்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் பல்வேறு பாதிப்புகள் காரணமாக ஆயிரத்து 19 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 89 மரணங்களும் எவ்வாறு நிகழ்ந்தவை என பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, 4 மரணங்கள் தடுப்பூசி சார்ந்தவை, 58 தற்செயலானவை, 16 வரையறுக்க முடியாதவை மற்றும் 11 வகைப்படுத்த முடியாதவை ஆகும்.

கடந்த மாதம் 30-ந் தேதி நிலவரப்படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட 49 ஆயிரத்து 819 பேருக்கு பல்வேறுவித பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. அதேநேரம், மொத்த பாதிப்புகளில் 47 ஆயிரத்து 691 லேசானவை, 163 தீவிரமானவை, ஆயிரத்து 965 மோசமானவை ஆகும்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.