Breaking News
முப்படை தலைமை தளபதியின் பிபின் ராவத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி
கோவை,
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து குன்னூர் விரைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். முப்படை தலைமை தளபதியின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 6.30 மணி அளவில் கோவை விமான நிலையம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கார் மூலம் சாலை மார்க்கமாக குன்னூர் புறப்பட்டு சென்றார். வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு 9 மணி அளவில் குன்னூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.
பின்னர் அங்குள்ள எம்.ஆர்.சி. மையத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கார் மூலம் குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு இரவு ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.