17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம்
முப்படை தளபதிகள், தலைவர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
* பல்வேறு நாட்டு ராணுவ தளபதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்பு
புதுடெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோரின் உடல், 17 பீரங்கி குண்டுகள் முழுங்க முழு ராணுவ மரியாதையுடன் நேற்று டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் முப்படை தளபதிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பலநாட்டு ராணுவ தளபதிகள் உள்பட பலர் பிபின் ராவத் தம்பதிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 8 ராணுவ வீரர்கள் டெல்லியில் இருந்து கடந்த 8ம் தேதி கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து, பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு புறப்பட்டனர். அப்போது வெலிங்டன் ராணுவ முகாம் அருகே காட்டேரி நஞ்சப்பசத்திரம் என்ற பகுதியில் மோசமான வானிலையால், ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரங்களின் மீது மோதி வெடித்து சிதறியது. இதில், பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் பலியாயினர். கேப்டன் வருண்சிங் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டார். அவருக்கு பெங்களூருவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் குன்னூர் ராணுவ மையத்தில் வைக்கப்பட்டது. அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து 13 பேரின் உடல்களும் கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் இரவு டெல்லி பாலம் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பிபின் ராவத், அவரதுமனைவி மதுலிகா உடல்கள், காமராஜ் மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்களும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மன்சுக் மண்டாவியா, ஸ்மிருதி இரானி, சர்பானாந்தா சோனாவால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஞானதிரவியம், எஸ்.ஆர்.பார்த்திபன், கலாநிதி வீராசாமி, ஆ.ராசா ஆகியோரும், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாரதிய கிசான் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். பிரிட்டன், பிரான்ஸ் தூதர்கள் மற்றும் இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாட்டின் ராணுவ தளபதிகளும் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைதொடந்து, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. காமராஜ் மார்க் பகுதியிலிருந்து டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் உடல்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது சாலை எங்கிலும் தேசிய கொடியுடன் மக்கள் திரண்டு ‘வந்தே மாதரம்’ என முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி கன்டோன்மென்ட் மயானத்தில் நடந்த இறுதி சடங்கில் 800 ராணுவ அதிகாரிகள், வீரர்கள் கலந்து கொண்டனர். முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். ராணுவ வீரர்கள் இசை வாத்தியங்கள் முழங்க, பிரார் சதுக்கத்தில் உள்ள தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா இருவரது உடல்களும் ஒன்றாக வைக்கப்பட்டது. அவர்களுக்கு, இரு மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி ஆகியோர் முறைப்படி இறுதி சடங்குகளை செய்தனர். பிபின் ராவத்தின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 17 பீரங்கி குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத், மதுலிகா சிதைகளுக்கு அவர்களின் மகள்கள் தீ மூட்டினர். இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத் மறைவுக்கு ஒட்டுமொத்த நாடும் நேற்று அஞ்சலி செலுத்தியது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிபின் ராவத் உருவப்படம் வைத்து மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதே போல, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற ராணுவ வீரர்கள் உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹரித்துவாரில் இன்று அஸ்தி கரைப்பு
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் அஸ்தியை ஹரித்துவாரில் புனித கங்கை நதியில் கரைக்க முடிவு செய்திருப்பதாக அவர்களது மகள்கள் தெரிவித்தனர். இன்று சில சடங்குகளைத் தொடர்ந்து, இருவரின் அஸ்தி ஹரிதுவார் கொண்டு செல்லப்பட்டு கங்கையில் கரைக்கப்பட உள்ளது.