Breaking News
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

சென்னை:

சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.

மாநகராட்சியின் போர்க்கால நடவடிக்கையால் மழை நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. தொடர் மழையின் காரணமாக சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

பேருந்து செல்லக்கூடிய சாலைகள், உட்புற சாலைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளை சீரமைக்கும் பணியை தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் இப்போதே கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தார் சாலைகள் மட்டுமின்றி கான்கிரீட் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டலம் வாரியாக சாலைகள் சேதத்தை அதிகாரிகள் கணக்கிடுகிறார்கள். மழை குறைந்துள்ளதால் இந்த மாத இறுதி முதல் சாலை சீரமைக்கும் பணியை தொடங்க உள்ளனர். இதற்கான ஒப்பந்தமும் இறுதி செய்யும் பணி நடக்கிறது.

சாலை

 

சென்னை நகரில் பல்வேறு பகுதிகள் தொடர் மழையால் சேதம் அடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவை சேதம் அடைந்த சாலையில் செல்ல முடியாமல் தடுமாறுகின்றன.

15 மண்டலங்களில் 1010 சாலைகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் அதற்கான செலவாகும் தொகையும் கணக்கிடப்பட்டுள்ளது. உட்புற தார் சாலைகளுக்கு ரூ.67.31 கோடியும் உட்புற கான்கிரீட் சாலைகளுக்கு ரூ.24.92 கோடியும், பேருந்து சாலைகளுக்கு ரூ.54.95 கோடியும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர அனைத்து மண்டலங்களிலும் சேதம் அடைந்துள்ள பிற சாலைகளையும் சீரமைப்பதற்காக அதிகாரிகள் எந்தெந்த சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஜனவரி மாதம் முதல் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.