Breaking News
ஒமைக்ரான் பரவல்: மீண்டும் கட்டுப்பாடுகள் வருமா? – பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
புதுடெல்லி,
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது.
இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த இந்த வைரஸ் 20 நாளில் 227 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரசை விட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிர்வாகங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் தேசிய அளவில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) சுகாதார நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் மற்றும் சுகாதார நிபுணர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் ஒமைக்ரானை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.