வடபழநி ஆண்டவர் கோவில்: 14 ஆண்டுகளுக்கு பின் எழில்கோலம்
சென்னை-சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் வசதிக்காக, கும்பாபிஷேக நிகழ்வு நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள், ஆன்மிக அன்பர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே, வைபவத்தை கண்டு பரவசம் அடைந்தனர்.
இன்று முதல் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.சென்னைக்கு மேற்கே, வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது, வடபழநி ஆண்டவர் கோவில். 1890ம் ஆண்டு மிக எளிமையாக இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. தற்போது, முருகனின் ஏழாம்படை வீடாகவே பக்தர்களால் கருதப்படும் வகையில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.யாகசாலையில் 108 ஹோம குண்டங்கள்பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சி பெற்ற இக்கோவிலுக்கு, 2007ல் திருப்பணி நடத்தி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
14ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்கின.கும்பாபிஷேக யாகசாலை கட்டுமானத்திற்கான முகூர்த்தக்கால் எனப்படும் பந்தக்கால், கடந்த டிச., 13ம் தேதி நடப்பட்டன. கோவில் மூலஸ்தான பாலாலயம், 5ம் தேதி நடந்தது.கும்பாபிஷேக ஆயத்த பூஜைகள், 17ம் தேதி முதல் துவங்கியது. யாகசாலை பிரவேசம், 20ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக முருகப் பெருமானுக்கு, 33 ஹோம குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு, 75 ஹோம குண்டங்கள் என யாகசாலையில், 108 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டன.
இதில், 1,300 கலசங்கள் வைக்கப்பட்டன.புண்ணிய நதிகளின் நீர்கும்பாபிஷேகத்திற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை உள்ளிட்ட, 15 புன்னிய நதிகளின் நீர், ஒன்பது பிரசித்தி பெற்ற கோவில்களின் நீர், அறுபடை வீடு கோவில்களின் நீர் கொண்டு வரப்பட்டது. புனித நதிகளின் நீர் வடபழநி, வேங்கீஸ்வரர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
பின், புனித நீர் குடங்கள் நகர்வலமாக வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.ஆதார பீடத்திற்குமருந்து சார்த்தல்கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கும்போது, சன்னதிகளில் ஆதார பீடத்தின் கீழ் யந்திரம் வைத்து, மூலவர், பரிவார தெய்வங்களின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.அதனை அடுத்த கும்பாபிஷேகம் வரை பாதுகாப்பதற்காக, அஷ்டபந்தனம் எனும் எட்டு மூலிகை மருந்துகளை அரைத்து சார்த்தப்படுகிறது.
இந்நிலையில், 21ம் தேதி காலை அஷ்டபந்தன மருந்து இடிக்கும் வைபவம் பிள்ளையார்பட்டி, சர்வசாதகம் பிச்சை குருக்கள், மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீஸ்கந்தகுரு முதல்வர் சிவஸ்ரீ ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் நடந்தது.சுக்கான் துாள் எனும் பச்சை சுண்ணாம்புக்கல், கற்காவி, கருங்குங்கிலியம், கொம்பரக்கு, உலாந்தா லிங்கம் எனும் ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருட்கள் சேர்த்து இடித்து, அஷ்டபந்தன கலவை மருந்து தயாரித்து சன்னதிகளின் பீடத்தில் சார்த்தப்பட்டது.அன்று மாலை தங்க முலாம் பூசப்பட்ட ஏழு தங்கக் கலசங்கள் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன.
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. அதைத் தொடர்ந்து நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹுதி நடந்தது.காலை, 7:00 மணி முதல், பரிவார யாகசாலையில் மகா பூர்ணாஹுதி நடந்தது. காலை, 9:30 மணிக்கு யாத்ரா தானம் முடிந்து கலசப் புறப்பாடு எனும் விமானங்களுக்கு, கலச நீர் கொண்டு செல்லும் நிகழ்வு நடந்தது.நேற்று காலை, 10:30 மணிக்கு, கோவில் தக்கார் இல.ஆதிமூலம் பச்சை வஸ்திர கொடி அசைக்க அனைத்து ராஜகோபுரங்கள், விமானக் கலசங்களுக்கும், கும்ப நீர் சேர்க்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
அனைத்து பரிவாரங்களுடன், வடபழநி ஆண்டவர் மஹா கும்பாபிஷேகம், தீபாராதனைகாலை, 11: 00 மணிக்கு நடந்தது. யாகசாலை, மஹா கும்பாபிஷேகம் சர்வசாதகம் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், 100 சிவாச்சாரியார்களால் நிகழ்த்தப்பட்டது.நேற்று மாலை, மஹா அபிஷேகம், திருக்கல்யாண வைபவம் நடந்தது. தம்பதி சமேதராய் ஆலய உட்பிரஹாரத்தை வலம் வந்த முருகப் பெருமான் அருட்காட்சியளித்தார்.
யாகசாலை பூஜைவேளையில் சதுர்வேத பாராயணம், மூலமஹாமந்த்ர ஜப பாராயணம், திருமுறைப் பாராயணம், நாத மங்கள இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.கும்பாபிஷேக விழா துளிகள்…l நேற்று முழு ஊரடங்கு என்பதால், பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நான்கு மாடவீதிகளை சுற்றி நின்று கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்l கும்பாபிஷேக நேரத்திற்கு கருடன் உள்ளிட்ட பட்ஷிகள் கோவிலையும், ராஜகோபுரத்தையும் வட்டமடித்தது, பக்தர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுl
கும்பாபிஷேகத்திற்கு நேரடி அனுமதி இல்லாததால், ‘யு-டியூப்’, தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்தனர்l கும்பாபிஷேக நேரடி ஒளிபரப்பின்போது, ஆன்மிக சொற்பொழிவாளர்கள் தேசமங்கையர்கரசி, தேவக்கோட்டை ராமநாதன் ஆகியோர் விழ நிகழ்வை தொகுத்து வழங்கினர். வீரமணி ராஜு குழுவினர் பக்திப் பாடல்களை பாடினர்l
கும்பாபிஷேகத்திற்கு கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள் கொரோனா விதிமுறைப்படி அனுமதிக்கப்பட்டிருந்தனர்l சுகாதார தேவைக்காக, மண்டல சுகாதார நல அலுவலர் பூபேஷ் தலைமையில், கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. நான்கு மாட வீதிகளிலும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.l
கோவிலின் நான்கு மாட வீதிகளில் நின்று கும்பாபிஷேகத்தை தரிசித்த பக்தர்கள் மீது, கும்ப நீர் நவீன உபகரணங்கள் வாயிலாக தெளிக்கப்பட்டது; புஷ்ப பிரசாதங்கள் துாவப்பட்டன.l கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், மாடவீதிகளை சுற்றி பல பக்தர்கள் ருத்திராட்சம், இனிப்பு பண்டங்கள், அன்னதானமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கினர்.