Breaking News
லக்கிம்பூர் வன்முறை: மத்திய மந்திரி மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர்,நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து,மத்திய உள்துறை இணை மந்திரி  அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் உயிரிழந்தனர் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, வழக்கும் தொடுக்கப்பட்டது.மேலும்,காவலர்களும் விசாரணையை தீவிரபடுத்தினர்.
இதனைத்தொடர்ந்து,இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும், எதார்த்தமாக நடந்தவை அல்ல என்றும் இந்த வன்முறைய விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்தது.
மேலும், விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவ இடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா இருந்துள்ளார் என்று கூறி அவரது பெயர் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றது. தலைமறைவாக இருந்த ஆஷிஸ் மிஸ்ரா உள்பட பலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, அலகாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆஷிஸ் மிஸ்ரா இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லக்னோ கிளை லக்கிம்பூர் வன்முறையில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது. இதனால், கடந்த 15-ம் தேதி ஆஷிஸ் மிஸ்ரா சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.