துணை கேப்டன் பொறுப்பு அளிக்காதது ஆச்சரியமளிக்கிறதா? – அஸ்வின் பதில்
‘பவுலிங்கின் டான் பிராட் மேன் என்று அழைக்கப்பட்ட இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் துணை கேப்டன் பொறுப்பு பற்றிய கேள்விக்கு தனக்கேயுரிய விதத்தில் பதில் அளித்தார்.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கேள்வி: ஒருநாள், டி20, டெஸ்ட் என்று அனைத்து வடிவங்களிலும் நீங்கள் அணியில் தேர்வு செய்யப்படுவது என்பது இப்போதெல்லாம் நேரடியான விஷயமாக இருக்கும் போது நீங்கள் துணைக் கேப்டன் பொறுப்பு அளிக்கப்படாதது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
அஸ்வின்: நான் அந்தக் கட்டத்தையெல்லாம் கடந்து விட்டேன். அதாவது நான் இதற்கு தகுதியானவன் எனக்கு இது அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பற்றியும் என் கைகளில் இல்லாதது பற்றியும் யோசிக்கும் கட்டத்தை நான் கடந்து வந்து விட்டேன். தலைமைப் பொறுப்பின்றியே முன்னிலை வகிப்பேன். இந்திய வெற்றிகளில் நான் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறேன் இதுவே மிகப்பெரிய திருப்தி.
கிரிக்கெட் சில அளவுகோல்களைக் கடைபிடித்தால் கிரிக்கெட்டைச் சுற்றி நிறைய விஷயங்கள் வித்தியாசமாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக கிரிக்கெட் அது இருக்க வேண்டிய தொழில் நேர்த்தியுடன் இல்லை. எனவே ஒட்டுமொத்தத்தையும் மாற்றுவதற்காக நான் இங்கு வரவில்லை என்பதை உணரும் நிலைக்கு நான் வந்து விட்டேன். ஆனால் மாற்றங்களை என்னால் கொண்டு வர முடியுமெனில் நான் நிச்சயம் செய்வேன். இப்போதைக்கு நான் என்னுள் அமைதியுடையவனாக, திருப்தியுடையவனாக இருக்கிறேன்.
மேலும் நேர்மையாகக் கூற வேண்டுமெனில் துணைக் கேப்டனாவது பற்றி எனக்கே உறுதியான விருப்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் கடினமாக உழைத்து வருகிறேன். எனவே என் வழியில் வராத ஒரு விஷயத்தை பற்றி நான் யோசிப்பது என் மனநிலைக்கு ஒப்பானதாக இல்லை.
இவ்வாறு கூறிய அஸ்வின், தனது பந்துகளை பேட்ஸ்மென்கள் கையாள முடியாத நிலைக்கு பந்துவீச்சை உயர்த்துவதே விருப்பம் என்றார்.
நன்றி : தி இந்து தமிழ்