கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் ஆட்டோ டிரைவர்
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகராட்சியாக இருந்து வந்தது. இந்த நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் முறையாக மாநகராட்சி தேர்தலை கடந்த மாதம்(பிப்ரவரி) 19-ந் தேதி சந்தித்தது. கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக மக்கள் வாக்களித்தனர். இதன் முடிவுகள் கடந்த மாதம் 22-ந் தேதி அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 42 இடங்களில் வென்று மாநகராட்சியை கைப்பற்றின. தி.மு.க. 37 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற 48 வேட்பாளர்களும் நேற்று முன்தினம் மாநகராட்சி கவுன்சிலராக பதவி ஏற்றுக்கொண்டனர். அறுதி பெரும்பான்மை வெற்றியை ருசித்த தி.மு.க. கூட்டணிக்கு கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயரை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்து உள்ள நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. மேயர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தி.மு.க. கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை உள்ளதால் சரவணன் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் ஆட்டோ டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. 37 வார்டுகளை கைப்பற்றி இருந்த போதிலும், 2 வார்டுகளை மட்டுமே வென்ற காங்கிரசுக்கு அதிர்ஷ்டவசமாக மேயராகும் வாய்ப்பு கிடைத்திருப்பது அக்கட்சியினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.