பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: சிறையில் சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் நேற்று காலை பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்தித்தனர். அப்போது சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனுவை தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான ஆவணங்களில் மூவரிடமும் கையெழுத்து பெற்றனர்.
சிறையில் சசிகலா கேட்ட ஏசி அறை, வீட்டு சாப்பாடு உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட வில்லை. எனவே சசிகலா சிறையில் கஷ்டப்படுவதாக வழக்கறிஞர்களிடம் இளவரசி தெரிவித்துள்ளார்.
இதனால் வழக்கறிஞர்கள் சட்ட விதிமுறைகளின்படி சசிகலா, இளவரசி உள்ளிட்டோரை பெங்க ளூரு சிறையில் இருந்து தமிழகத் தில் உள்ள சிறைக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர். அதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழ கத்தில் அதிமுக ஆட்சி நடைபெறு வதால் கர்நாடக சிறையில் இருந்து தமிழகத்துக்கு மாற்றுவது சிரமமான காரியமாக இருக்காது. கர்நாடக அரசும், சிறைத் துறையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது என நம்பிக்கை அளித்துள்ளனர்.
இதையடுத்து வழக்கறிஞர்கள் செந்திலும், அசோகனும் உடனடி யாக சிறையை மாற்றுவது தொடர்பான பணிகளை முடுக்கி விடுவதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு வையும் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறையில் வழங்க வேண்டிய வசதிகள் தொடர்பாக கர்நாடக சிறை துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இதனிடையே நேற்று மாலை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு வந்த கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தகவலைக் கடிதமாக எழுதி காவலர்கள் மூலமாக சசிகலாவுக்கு கொடுத்து அனுப்பினார். இதேவேளையில் பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலாவின் கணவர் ம. நடராஜன், உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார் உள்ளிட்டோர் சசிகலாவைச் சிறைக்கு சென்று சந்திக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது திரண்ட அளவுக்கு அதிமுக நிர்வாகிகளோ, தொண்டர்களோ சசிகலாவைக் காண சிறைக்கு வரவில்லை.
தொடர்புடையவை
சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா: காலையில் புளிசாதம், மதியம் களி, இரவில் சப்பாத்தி
பெங்களூருவில் சசிகலா தரப்பு வாகனத்தை தாக்கியவர்கள் யார்? – பத்திரிகையாளர்களா? பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா?
நன்றி : தி இந்து தமிழ்