வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலையில் : இந்தோனேசிய பெண்ணுக்கு தொடர்பு
வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் என இந்தோ னேசியா உறுதி செய்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம், சமீபத்தில் மக்காவ் நாட்டில் இருந்து மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தபோது, 2 பெண்கள் அவருக்கு விஷ ஊசி செலுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நம் உயிரிழந்தார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஒரு பெண்ணையும் நேற்று ஒரு பெண்ணையும் மலேசிய காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் ஒருவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை பரிசோதித்த போது, அவர் இந்தோனேசியாவின் பன்டென் மாகாணத்தின் செராங் பகுதியைச் சேர்ந்தர் சிதி ஆய்ஷா (25) என தெரியவந்தது. மற்றொரு பெண்ணின் பெயர் டோன் தி ஹுவாங் (28) என்றும் இவர் வியட்நாம் செல்வதற்கான ஆவணம் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடியுரிமை பாதுகாப்புத் துறை இயக்குநர் லாலு முகமது இக்பால் கூறும் போது, “எங்கள் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் மலேசியாவில் பணியாற்றுகிறார் கள். இந்நிலையில், எங்கள் நாட்டினரிமிடருந்து காணாமல் போகும் பாஸ்போர்ட்டைப் பயன் படுத்தி சிலர் மலேசியாவில் குற்றச் செயலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.
எனவே, கிம் ஜாங் நம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தொடர்பாக மலேசிய அதிகாரிகளும் அங்குள்ள எங்கள் நாட்டு தூதரகமும் வழங்கிய தகவலை ஆய்வு செய்தோம். இதில் அந்தப் பெண் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் என தெரிய வந்துள்ளது” என்றார்.
இதனிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பெண் கூலிப்படையை வைத்து தனது அண்ணனைப் படுகொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மலேசிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் கூலிப்படை
வடகொரிய ராணுவத்திலிருந்து வெளியேறி தென்கொரியாவில் வசித்து வரும் ஆன் சான்-2 கூறும்போது, “வடகொரிய அரசு தங்களது அதிருப்தியாளர்களைக் கொல்வதற்காக முன்பு ஆண்கள் கூலிப்படையை வைத்திருந்தது. இவர்கள் துப்பாக்கி, கத்தியைக் கொண்டு கொலை செய்து வந்தனர். இப்போது இந்த நிலை மாறி, அழகான பெண்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விஷ மருந்துகள் மூலம் எதிரிகளை கொல்வதற்கான பயிற்சி இவர் களுக்கு வழங்கப்படுகிறது” என்றார்.
மேலும், வடகொரியாவைச் சேர்ந்த கூலிப்படையினர் கிம் ஜாங் நம்மின் முகத்தில் நச்சுப்பொருளை ஊற்றி கொலை செய்துள்ளதாக தென்கொரிய உளவுப் பிரிவு தலை வர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ்