குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசு நடத்தியது; ரஷ்யா குற்றச்சாட்டு
கீவ்,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
எனினும், ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன என உக்ரைன் அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. இந்த சம்பவத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மருத்துவமனையின் இடிபாடுகளுக்குள் மக்கள், குழந்தைகள் உள்ளனர். இது அக்கிரமம் என அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த தாக்குதலுக்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். காட்டுமிராண்டித்தனம் என வெள்ளை மாளிகையும், சீரழிவு என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் சாடி உள்ளனர். சுகாதார மையம் ஒரு போதும் தாக்குதலுக்கு இலக்காக கூடாது என ஐ.நா. அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டுகள் நிறைந்த மருத்துவமனை ஒன்றின் மீது நடந்த தாக்குதல் பயங்கரம் ஆனது. போருடன் எந்தவித தொடர்பும் இல்லாத பொதுமக்கள் அதற்கு அதிக விலை கொடுத்து வருகின்றனர். உணர்வற்ற இந்த வன்முறை நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும். இந்த படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டு உள்ளது என ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. உக்ரைன் அதிபரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஐ.நா. அமைப்புக்கான ரஷியாவின் முதன்மை துணை நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி போலியான்ஸ்கி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போலியான செய்தி எப்படி பிறந்துள்ளது என காணுங்கள் என தெரிவித்து உள்ளார்.
ரஷியா, மரியுபோலில் தாக்குதலை நிறுத்த உறுதி அளித்தது. இதனால், அந்த பகுதியில் சிக்கியிருக்கும் குடிமக்கள் தப்பி செல்ல முடியும். ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீர் மற்றும் மின் வசதி இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ரஷியா முன் வந்தது. எனினும், இரு நாடுகளும் மக்கள் வெளியேறும் நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.