Breaking News
ரஷியாவில் சோனி மியூசிக் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்..!
வாஷிங்டன்,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.
மேலும் பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் ரஷியாவில் தன்னுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய சோனி மியூசிக், நாங்கள் உக்ரைனில் வன்முறை முடிவுக்கு வரவும் அங்கு அமைதி பிறப்பதற்கும் அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் ரஷியாவில் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தி உக்ரைனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எங்களது உலகளாவிய மனிதாபிமான நிவராண முயற்சியை தொடர்வோம் என்று கூறியுள்ளது.
மேலும் இந்த சேவை நிறுத்த காலத்திலும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்கிழமைய அன்று யுனிவர்சல் மியூசிக் குழுமம் ரஷியாவில் தங்களுடைய சேவைகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
மேலும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் வருகிற நாட்களில் அதனுடைய செயல்பாடுகளை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த ‘தி பேட்மேன்’ திரைப்படத்தை ரஷியாவில் வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.