இந்தியாவுக்கான யுத்தம் 2024ல் தான்; பிரசாந்த் கிஷோர்
புதுடில்லி: நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றிப்பெற்றது, 2024ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலிலும் எதிரொலிக்கும் என பிரதமர் மோடி பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ‛இந்தியாவுக்கான யுத்தம் 2024ல் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படுமே தவிர மாநில தேர்தலை வைத்து அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று (மார்ச் 10) வெளியானது. இதில், 4 மாநிலங்களில் பா.ஜ., அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் நேற்று பிரதமர் மோடி பேசுகையில், ‛நிச்சயம் இந்த 4 மாநிலங்களில் கிடைத்துள்ள வெற்றி 2024ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலிலும் எதிரொலிக்கும்’ எனக் குறிப்பிட்டார்.
பா.ஜ.,வின் வெற்றி குறித்தும், பிரதமரின் இந்த பேச்சு தொடர்பாகவும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கான யுத்தம் 2024ல் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படுமே தவிர மாநில தேர்தலை வைத்து அல்ல. அவருக்கு (பிரதமர் நரேந்திர மோடிக்கு) இது தெரியும். இருப்பினும், இந்த தேர்தல் முடிவுகளை வைத்து உளவியல் ரீதியிலான ஆதாயத்தை பெற மேற்கொள்ளப்பட்ட புத்திசாலித்தனமான முயற்சி இது. இந்த தவறான கருத்துக்கு இரையாகாதீர்கள், நம்பிவிடாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.