சென்னை விமான நிலையத்தில் தமிழக மாணவர்களை வரவேற்ற மு.க.ஸ்டாலின்
சென்னை:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை அடுத்து அங்கு தவித்து வந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதே நேரத்தில் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்புக்காக சென்ற மாணவர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் தமிழர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கைகளை எடுத்தார்.
இதையடுத்து உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்களை மீட்பதற்கு உதவும் வகையில் மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராசாமி மற்றும் அதிகாரிகள் ஜெசிந்தா, அஜய் யாதவ் உள்ளிட்ட 5 அதிகாரிகளும் இடம்பெற்று இருந்தனர்.
இவர்கள் டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மாணவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதன்படி உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டனர். மத்திய அரசுடன் இணைந்து தமிழக குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து பத்திரமாக நாடு திரும்பினர்.
உக்ரைனில் தவித்து வந்த இந்தியர்களை மீட்பதற்கு போர் விமானங்களையும் மத்திய அரசு அனுப்பி வைத்து இருந்தது. இந்த விமானங்கள் மூலமாகவும், தமிழர்கள் டெல்லி வந்து பின்னர் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். பல்வேறு குழுக்களாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்டவர்கள் ஊர் திரும்பி இருந்தனர்.
அந்த வகையில் உக்ரைனில் இருந்து நேற்று தமிழக மாணவர்கள் 57 பேர் பத்திரமாக டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை டெல்லியில் இருந்த தமிழக குழுவினர் வரவேற்று தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 57 மாணவர்களையும் தங்க வைத்து உணவு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலையில் இந்த மாணவர்கள் அனைவரும் விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு மாணவர்கள் வந்து சேர்ந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று மாணவர்களை வரவேற்றார். அப்போது மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தார். உக்ரைனில் தவித்ததை குறித்தும் மு.க.ஸ்டாலின் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
டெல்லியில் தங்கியிருந்த எம்.பி.க்கள் திருச்சி சிவா, அப்துல்லா ஆகியோரும் மாணவர்களுடன் வந்திருந்தனர்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் ஆகியோரும் மாணவர்களை வரவேற்றனர்.
இதுவரை 1,800 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்களில் 34 பேர் தாங்கள் தமிழகத்துக்கு திரும்ப விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டு அங்கேயே தங்கி உள்ளனர். இவர்களை தவிர்த்து உக்ரைனில் தவித்த அனைத்து தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.