Breaking News
சொத்துவரி உயர்வு வெறும் ட்ரைலர் தான், பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது – எடப்பாடி பழனிசாமி
சென்னை,
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்நிலையில், சொத்து வரி உயர்த்தப்பட்டத்தற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது.
இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு நேற்று அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022-ம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.
600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்பட உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.