Breaking News
“அதிமுக பொதுச்செயளாலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்” – சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.
அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இம்மாதம் 8ம் தேதி, தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. ஆனால், நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்படி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.