Breaking News
’யாராலும் திருட முடியாத சொத்து கல்வி… அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது’ – மாணவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை,
அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான துவக்கவிழாவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ’நம் பள்ளி நம் பெருமை’ என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 557 பள்ளிகளிலும் புதிய மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
இந்த மேலாண்மை குழுவில் பெற்றோர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட பலர் இடம்பெற உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் பேசுகையில், பள்ளிப்பருவம் திரும்பக்கிடைக்காத மகிழ்ச்சி. மனநிறைவு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் உடையது பள்ளிப்பருவம். இத்தகைய பள்ளி பருவத்தை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடமிருந்து யாராலும் பிரிக்கமுடியாது. திருட முடியாத சொத்து என ஒன்று உண்டு என்றால் அது உங்களின் கல்வி மட்டும்தான். கல்வியை யாராலும் திருட முடியாது. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள் அந்த அளவு கல்விக்காக இந்த அரசு மிக மிக மிக முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது.
கல்வி எனும் நீரோடை சீராக செல்ல மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் எண்ணம் ஒரேசீராக இருக்க வேண்டும்.
பெற்றோர் உங்கள் குழந்தைகள் என்னவாகவேண்டுமென விரும்புகிறார்களோ அதற்கு தடைபோராமல் தடங்கள் செய்யாமல் வழிகாட்டுங்கள், உதவுங்கள். பெற்றோர் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணித்துவிட வேண்டாம்.
மாணவச்செல்வங்களை வளர்த்தெடுப்பதை குறிக்கோளாக கொண்டு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிகள் செயல்படவேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம்.
பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இந்திய துணைக்கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.