Breaking News
தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்!
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.
சட்டசபையில் மசோதா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
உயர்கல்வியில் மாநில அரசை மதிக்காமல் கவர்னர் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது இது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது.
துணை வேந்தர் நியமன அதிகாரம் கவர்னரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும் கவர்னர் – மாநில அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும்.
துணை வேந்தர்களை கவர்னர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். 13 பல்கலைக்கழகங்கள் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது;  இதே நிலை தான் கர்நாடகம், தெலங்கானாவிலும் உள்ளது என கூறினார்.
சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக  அதிமுக தெரிவித்துள்ளது.
வேல்முருகன் எம்எல்ஏ பேசும் போது  மாநில உரிமைகளை படிப்படியாக மீட்டெடுக்கும் முதல்- அமைச்சருக்கு பாராட்டுகள்;  கால்நடை, மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என கூறினார்.
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேசும் போது  தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் நடுநிலையோடு திறமைவாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்போது அரசியல் உள்நோக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளது என கூறினார்.
மசோதா சட்டசபையில் நிறைவேற்றபட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.