Breaking News
பள்ளி மோதலில் மாணவன் பலி: பள்ளி நிர்வாகக் குழு ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது.  இந்த பள்ளியில் பள்ளக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 25ந்தேதி இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெல்ட்டால் தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு மாணவருக்கு காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அந்த 12ம் வகுப்பு மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவத்தில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில் அந்த மாணவன் உயிரிழந்ததால் தற்போது அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் அம்பை அருகே பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.